

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மழையை மட்டுமே பெருமளவு நம்பியுள்ள திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நன்னிலம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் சூழ்ந்து விடுவதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. கடந்த ஓரிரு தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் நேற்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் சேங்கனூர், புத்தகளூர், அதம்பார், திருக்கொட்டாரம், வேலங்குடி, முகந்தனூர், பாவட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அதே நேரத்தில், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி உள்ளனர். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், இந்தப் பகுதிக்கு வராத நிலையில், சம்பா, தாளடி விவசாய பணிகள் தாமதமாகத்தான் தொடங்கியது. இந்த சூழலில், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையானது,
நெற்பயிர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுத்துள்ளது. இந்த மழைக்குப் பிறகுதான் பயிர்கள் செழித்து வளர தொடங்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.