Published : 25 Nov 2023 05:22 AM
Last Updated : 25 Nov 2023 05:22 AM

நான் லஞ்சம் வாங்கியதை நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை பதில்

சென்னை: ஆவின் விவகாரத்தில் நான் லஞ்சம் வாங்கியதை 48 மணி நேரத்துக்குள் நிரூபிக்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதாக ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றையும் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அந்த அறிக்கையில், “உண்மை தன்மை இல்லை என்றும், வடமாநிலங்களில் உள்ள நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவர்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்துக்கு எதிராக பேசுகின்றனர்” எனவும் தெரிவித்திருந்தார்.

பொதுவெளியில்..: இந்நிலையில், தான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன்.

திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, அமைச்சர் மனோ தங்கராஜ், தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிடவேண்டும். குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x