

திருச்சி: தமிழக முதல்வர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதாக ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி எஸ்.பி. வருண்குமாரிடம், திருச்சி மத்திய மாவட்டதிமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ஷீலா அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ், வாட்ஸ்-அப் குழுவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்துஅவதூறாக செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘‘இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற வேண்டுமென்றால், அப்படி ஒரு வெற்றிதேவையில்லை. இந்துக்களின் வாக்குகளைப் பெறும் அளவுக்குதிமுக தரம் தாழ்ந்துவிடவில்லை’’ என்று முதல்வர் கூறியுள்ளதாகவும், அது ஒரு செய்தி சேனலில் வந்துள்ளதாகவும் தவறான தகவலைப் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழக போலீஸார் ஆதரவுடன் இடிக்கப்பட்டுள்ளது என்று எக்ஸ் வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு, தமிழகஅரசுக்கும், காவல் துறைக்கும்அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், மதக் கலவரங்களைத் தூண்டி, சட்டம்ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நடராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (கலகத்தை ஏற்படுத்துதல்), 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல்), 505(2)(இ ருபிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் தீய எண்ணத்துடன் செயல்படுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008 பிரிவு 66(டி) (தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல்) உள்ளிட்ட 6 பிரிவுகளில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.