Published : 25 Nov 2023 05:55 AM
Last Updated : 25 Nov 2023 05:55 AM

கோயில் நிதியை பயன்படுத்த அறங்காவலர்களுக்கு அனுமதி அளித்து விரைவில் அரசாணை

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்உள்ள கோயில்களின் நிதியில் இருந்து முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன்படி, வில்லிவாக்கம் ஸ்ரீதேவிபாலியம்மன், எலங்கியம்மன் கோயில், நெல்லையப்பர், பழநிதண்டாயுதபாணி கோயில்களின் நிதியிலிருந்து முதியோர் இல்லங்கள் தொடங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஆலய வழிபாட்டாளர் சங்கம் சார்பில் மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "முதியோர் இல்லங்கள் அமைக்க எந்த விதிகளையும் பின்பற்றாமல், நேரடியாக கோயில் நிதி பயன்படுத்தப்படுவது தவறானது" என்று குற்றம் சாட்டப்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மாநில அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, "கோயில்களில் தக்கார் மட்டுமே இருந்ததால்தான், இந்த நிதியை ஒதுக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது தற்போது அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது" என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசாணையில் தக்கார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, "அந்த அரசாணையை திரும்பப் பெற்று, கோயில் நிதியை பயன்படுத்தும் வகையில், அறங்காவலர்களுக்கு அனுமதி அளிக்கும் புதிய அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x