Published : 18 Jan 2018 03:48 PM
Last Updated : 18 Jan 2018 03:48 PM

அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணம் தொடங்குவதாக கமல் அறிவிப்பு: கலாம் குடும்பத்தினர் வரவேற்பு

ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் பயணம் தொடங்குவேன் என நடிகர் கமல் அறிவித்துள்ளார். இதனை கலாமின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

நடிகர் கமல் ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தாலும், முழுமையான அரசியல் நகர்வு குறித்து கமல் எதையும் தெரிவிக்காமல் இருந்தார். சமீபத்தில் அரசியலில் குதிப்பீர்களா என்று 'தி இந்து' தமிழ் நடத்திய 'யாதும் தமிழே' நிகழ்ச்சியில் கமலிடம் கேட்டபோது, நான் ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன். நேரம் வரும், நிச்சயம் வருவேன் என்று கூறியிருந்தார்.

16.01.2018 அன்று கமல் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், ''தான் பிறந்த ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி தன் கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாவும், ஆரம்பகட்ட சுற்றுப் பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து நடிகர் கமல் பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கமல், அப்துல் கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப் பெரிய சரித்திரமும், மானுடவியல் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் கமலின் அரசியல் பயணம் குறித்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் கூறியதாவது,

''அப்துல் கலாம் அனைவருக்கும் உரித்தானவர். ராமேசுவரத்தில் உள்ள கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயரிடம் நடிகர் கமல் ஆசிர்வாதம் பெற்று, பேக்கரும்பில் உள்ள கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு தமது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

முன்னதாக அப்துல் கலாம் விஷன் இந்தியா கட்சி என்கிற கட்சியினை 28.02.2016 அன்று கலாமின் உதவியாளர் பொன்ராஜ் ராமேசுவரத்தில் உள்ள கலாமி நினைவிடத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x