

சென்னை: சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரைக் கடித்த நாய்க்கு, வெறி நோய் (Rabies) இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கடிபட்டவர்களுக்கு 5 தவணை தடுப்பூசி போட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை ராயபுரம் பகுதியில் ஜி.ஏ.சாலையில் சுற்றித் திரிந்த வெறி பிடித்த நாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்தது. இவ்வாறு 28 பேரைக் கடித்துள்ளது. முதியவர்கள் பலர் நாய் கடியிலிருந்து தப்பிக்க ஓடியதில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர். நாயின் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து, உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி இருந்தனர்.
31 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு: கடிபட்டவர்கள் அனைவரையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் தவணை வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையில் உடற்கூறு ஆய்வு முடிவில் அந்த நாய்க்கு வெறி நோய் இருந்தது தெரியவந்தது. எனவே அந்த நாயால் கடிபட்டவர்கள் மாநகராட்சி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாயால் கடிபட்டவர்களுக்கு 5 தவணை தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தவணை போடப்பட்ட நிலையில், 3-வது நாளில் 2-வது தவணை தடுப்பூசி தற்போது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போடப்பட்டு வருகிறது. பின்னர் 7-வதுநாள், 14-வது நாள், 28வது நாள்ஆகிய நாட்களில் தடுப்பூசி போட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தெரு நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதுவரை 31 நாய்கள் பிடிக்கப்பட்டு, இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி சுமார் 48 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாய்களைப் பிடிக்கும் பணி அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.