

சேலம்: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும், என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். இது குறித்து சேலத்தில் அவர் கூறியதாவது: பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை அம்மாநில ஆளுநர் நிறுத்தி வைத்த வழக்கில், மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும்போது ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு மதுரை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. தமிழக ஆளுநர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு சாட்சியாகும்.
ஊழலே இல்லாத ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள், வழக்குகளில் தொடர்புடையவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை கொண்டு பாஜக சோதனை நடத்துகிறது. மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில், ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள தகவல்களை, பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது கண்டிக்கத்தக்கது, என்றார்.