Published : 21 Jan 2018 10:31 AM
Last Updated : 21 Jan 2018 10:31 AM

நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தி தேனியில் ஜனவரி 31-ல் விழிப்புணர்வு பிரச்சாரம்: வைகோ தலைமையிலான நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானம்

மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலிறுயுத்தி வரும் ஜனவரி 31-ம் தேதி தேனி மாவட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ள நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.

நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் வைகோ தலைமையில் நடைபெற்றது.

அதில், தற்சார்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கி.வே.பொன்னையன், மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி, பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சார்பில் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரத்தில் அமைய இருந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள் ளன.

சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர், திட்டத்தின் பாதிப்புகளை விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

ஆனால், ஒரு சாதாரணக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி போல சுற்றுச்சூழல் அறிக்கைகள் எதுவும் இன்றி, அந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல் நியூட்ரினோ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதை எதிர்த்து, பூவுலகு நண்பர்கள் அமைப்பின் சார்பில் தொடுத்த வழக்கில், அந்த அனுமதியை ரத்து செய்து 2017 மார்ச் 20-ம் தேதி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தற்போது நியூட்ரினோ திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து, எல்லாத் தடைகளையும் நீக்கி, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆயத்தமாக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு செய்வது, சட்டத்துக்குப் புறம்பான செயல் ஆகும்.

எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வலிறுயுத்தி, ஜனவரி 31-ம் தேதி தேனி மாவட்டத்தில் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x