Published : 24 Nov 2023 11:14 PM
Last Updated : 24 Nov 2023 11:14 PM

"முதலில் தமிழன், அடுத்துதான் இந்தியன்" - அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: "உலகில் எங்கு சென்றாலும் முதல் பெருமை நான் தமிழன். பெருமை மட்டுமல்ல, ஆணவம் இருக்க வேண்டும். அடுத்துதான் இந்தியன்." என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். "உலகின் மிக பழமையான மொழி, தமிழ். நம் தாய் மொழியை தமிழ்நாட்டிலேயே பாதுகாக்க வேண்டும் என 40 ஆண்டுகளாக போராடுகிறோம். இந்த நிலைக்கு தான் இன்று தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே தமிழ் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைகள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற பல நடவடிக்கைகளை தமிழகத்தை சார்ந்த அரசியல் கட்சிகள் எடுத்தனர். ஆனால் அது போதுமானது கிடையாது. 2006ல் அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாமை நேரில் சந்தித்து தீர்மானம் வலியுறுத்தவும் செய்தார்.

அரசியல் சாசன சட்டத்தில் 348வது பிரிவு 2ல் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியை மாற்ற குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியை அலுவல் மொழியாக அறிவித்தார்கள். அந்த அடிப்படையில் ஜனாதிபதி அப்துல் கலாம் அன்றைய சட்ட அமைச்சருக்கு இந்த பரிந்துரையை பரிசீலிக்க அனுப்பினார். அப்போது வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து அக்கோரிக்கையை நிறைவேற்றாமல் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பினார்கள். அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், இக்கோரிக்கை முடியாது என்று நிராகரித்தார். இது தமிழுக்கு மட்டுமல்ல, சமூக நீதிக்கு பின்னடைவு. இதன்பின் 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தமிழை வழக்காடு மொழியாக மாற்ற சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றினார். அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் கிடையாது. சிலர் தவறுதலாக இந்தி இருப்பதாக சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. உலகத்தில் பழமையான மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். இந்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது. உலகில் எங்கு சென்றாலும் முதல் பெருமை நான் தமிழன். பெருமை மட்டுமல்ல, ஆணவம் இருக்க வேண்டும். அடுத்துதான் இந்தியன்.

இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்களில் ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் அவர்களுடைய தாய்மொழியை படிக்காமலே பட்டம் பெறலாம். அது தமிழ்நாடு தான். தமிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு, தமிழ் படிக்காமலே பட்டம் பெறலாம், ஏன் பட்ட மேற்படிப்பை முடிக்கலாம். இந்த நிலையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என வெற்று பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் தற்போது எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வெறும் பேச்சு, வசனம் மட்டும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது போல் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என இருக்கிறதா என்றால் இல்லை.

இது அரசியல் கட்சி பிரச்சினை கிடையாது. மிக மிக முக்கியமான மக்கள் பிரச்சினை. தற்போது நல்ல சூழல் இருக்கிறது. இந்த கோரிக்கைக்கு ஒருமித்த சூழல் நிலவி வருகிறது. எனவே முதல்வர் ஸ்டாலின் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x