பெரும்பாக்கம் ஏரியின் மதகு உடைப்பால் ஒரு மாத பாசன நீர் வீணானது - விவசாயிகள் கவலை

பெரும்பாக்கம் ஏரியின் உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு விவசாயிகளுடன் சேர்ந்து  சீரமைக்கும் பொதுப்பணித்துறையினர்.
பெரும்பாக்கம் ஏரியின் உடைப்பை மணல் மூட்டைகள் கொண்டு விவசாயிகளுடன் சேர்ந்து சீரமைக்கும் பொதுப்பணித்துறையினர்.
Updated on
2 min read

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் 1.062 சதுர கிலோ மீட்டரில் 263 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 1.47 மில்லியன் கன அடியாகும். இதில் 4 மதகுகள் மூலம் கோனூர், தோகைப்பாடி, வெங்கடேசபுரம் கிராமங்களைச் சேர்ந்த 389 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் நீளம் 3.200 கிலோ மீட்டராகும். தென்பெண்ணையாற்றின் துணை வாய்க்கால் மூலம் தெளிமேடு வழியாக இந்த ஏரிக்கான நீர் வரத்து உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் சீரமைத்தல் பணிகள் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்றது. இது சரிவர நடைபெறவில்லையென குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தச் சூழலில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஏரியில் 80 சதவீத அளவுக்கு நீர் நிரம்பியது. நேற்று முன்தினம் பிரதான மதகின் சேறடி எனப்படும் அடிப்பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதனால், ஏரியைச் சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் வயல் வெளியில் தண்ணீர் தேங்கியது. உடனே அப்பகுதி விவசாயிகள், மணல் மூட்டைகளைக் கொண்டு, சேதமடைந்த மதகு பகுதியை அடைக்க முயன்றனர். ஆனாலும், தண்ணீர் வெளியேறியதை தடுக்க முடியவில்லை.

“மழைக்காக காத்திருந்தோம். தற்போது மிதமான அளவில், சீராக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. நடப்புத் தேவைக்கும், அடுத்து வரும் பருவத்துக்கான பாசனத் தேவைக்கும் நீர் இருப்பு போதுமானது என்று நினைத்து மகிழ்ச்சியுடன் இருந்தோம். இந்த நிலையில், இந்த மதகு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மதகு உடைப்பால், ஒரு மாதத்துக்கு தேவையான பாசன நீர் ஒரே நாளில் வீணாக வெளியேறியுள்ளது. ஏரியின் கரையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் மதகை சீரமைக்கும் பணியை பொதுப்பணித் துறையினர் தரமானதாக செய்யாததால் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது” என்று இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏரி உடைந்ததால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் நீர்.
ஏரி உடைந்ததால் விளை நிலங்களில் தேங்கி நிற்கும் நீர்.

இந்த ஏரி உடைப்பை அறிந்த விழுப்புரம் பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், கார்த்திக் உள்ளிட்டோர் நேற்று 100 மணல் மூட்டைகளை கொண்டு, அப்பகுதி விவசாயிகளின் ஒத்துழைப்போடு உடைப்பை சரி செய்தனர். இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, “ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் சிலர் தன்னிச்சையாக மதகை திறக்க முற்பட்டபோது, தவறுதலாக சேறடி எனப்படும் அடிப்பகுதியை திறந்து விட்டனர். இதனால் தண்ணீர் வெளியேறியுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை” என்று தெரிவித்தனர். பொதுப்பணித் துறையினர் இவ்வாறு கூறினாலும் வயல்வெளிகளில் ஏரி நீர் பெருக்கெடுத்து நிற்பதை பார்க்க முடிந்தது.

பொதுப்பணித் துறையினரின் விளக்கம் குறித்து மீண்டும் விவசாயிகளிடம் பேசிய போது, “ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்து வருகிறோம். ஒரு மதகில் மூன்றடுக்கில், கடைசி பகுதியில் சேறடி இருக்கும் என்பதும், நீருக்குள் மூழ்கி அந்த சேறடியைத் திறக்க கூடாது என்பதும் எங்களுக்கு தெரியும். அவ்வாறு செய்தால், சமயத்தில் ஆளையே உள்ளே இழுத்து விடும் என்பதும் தெரியும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் குறிப்பிடுவது போல நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. பொறுப்பாக சீரமைப்பு பணிகளை செய்திருந்தால் இந்த உடைப்பு ஏற்பட்டிருக்காது. பாசன நீர் வீணாகி இருக்காது” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in