Published : 24 Nov 2023 02:39 PM
Last Updated : 24 Nov 2023 02:39 PM

“திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்” - முதல்வர் ஸ்டாலின்

திருமண விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் எல்லாம் பயன்படுத்த வேண்டும்" என்று திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், திமுக பிரமுகர் திருமங்கலம் கோபால் இல்லத் திருமண விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நடத்திவைத்தார். அப்போது முதல்வர் பேசியதாவது: "முதன்முதலில், இளைஞர் அணி என்ற அமைப்பை திமுகவுக்கு ஒரு துணை அமைப்பாக உருவாக்க வேண்டுமென்று தலைமைக் கழகம், தலைவர் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் முடிவு செய்து, அதற்குப் பிறகு அதைத் துவக்கினார்கள். அது தொடங்கிய காலத்திலிருந்து, தொடர்ந்து நகரப் பகுதிகள், ஒன்றியப் பகுதிகள், கிராமப் பகுதிகள், ஊராட்சி பகுதிகள், பேரூராட்சிப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகள் என நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன்.

சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன் என்றால் அதில் குறைந்தபட்சம் 30% இடங்களுக்கு என்னோடு துணையாக வந்தவர் திருமங்கலம் கோபால். அதற்குப் பிறகுதான் 1975-ஆம் ஆண்டு நெருக்கடி கால நேரத்தில் தலைவர் கருணாநிதியோடு நெருங்கிப் பழகும் ஒரு சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடைய உயிர் பிரிகிற வரையில், கடைசி வரையில், தலைவருக்குத் துணையாக இருந்து பணியாற்றியவர் திருமங்கலம் கோபால் என்பதை இங்கு நான் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எப்படி, அண்ணா, கருணாநிதி, அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்து எப்படி தலைவராகப் பொறுப்புக்கு வந்தார்களோ, அந்த இளைஞர்களாக இருந்தவர்கள் பொறுப்புக்கு வந்த காரணத்தினால்தான் இளைஞர்தான் கட்சிக்குத் தேவை என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் அந்த இளைஞரணியை உருவாக்கினார்கள். அந்த இளைஞரணியை உருவாக்கி எந்த அளவுக்கு கம்பீரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

நான் பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன். திமுகவுக்கு எத்தனையோ அணிகள் இருந்தாலும், இதைச் சொல்கின்ற காரணத்தால் மற்ற அணிகளைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். எல்லா அணியைவிட ஒரு சிறந்த அணி இருக்கிறது என்றால் அது இளைஞரணி என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். அது எதார்த்த நிலை. அதை எல்லோரும் புரிந்துகொண்ட நிலைதான், அதனால் தவறாக நினைக்க வாய்ப்பே கிடையாது. அந்த இளைஞரணி இன்றைக்கு கம்பீரமாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

விரைவில், சேலத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டுக்காக மாவட்டவாரியாகக் கூட்டங்களை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார். செயல்வீரர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டக் கழக நிர்வாகிகளோடு, கட்சியின் முன்னோடிகளோடு ஆலோசனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். மோட்டார் சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி, ஒரு எழுச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எப்படி அன்றைக்கு இளைஞரணி தேவை, இளைஞரணியை பெருமைப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும், உற்சாகப்படுத்தவேண்டும் என்று தலைவரும் பேராசிரியரும் விரும்பினார்களோ, அதேபோல் இன்றைக்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றவர்கள் எல்லாம் இளைஞரணி வளரவேண்டும் என்று விரும்பிக்கொண்டு இருக்கிறோம். அந்த விருப்பத்துக்கேற்ப அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி இன்னும் சிறப்பாக செயல்படவேண்டும் என்று இந்த நேரத்தில் நம்முடைய திருமங்கலம் கோபால் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழா நிகழ்ச்சியில் கேட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

ஆகவே, அப்படிப்பட்ட வளர்ச்சியைக் கண்டு இன்றைக்கு பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதேதோ தவறான பிரச்சாரங்களை, தேவையற்ற பிரச்சாரங்களை, பொய் செய்திகளை, அதுவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, மக்களை குழப்பிக் கொண்டிருக்கக்கூடிய அந்த செய்திகளையும் தொடர்ந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யார் வேண்டுமானாலும் குழப்பட்டும், அண்ணாமலை போன்றவர்கள் குழப்பினாலும் கவலைப்படமாட்டேன். ஆனால், மத்தியில் இருக்கக்கூடிய நம்முடைய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாம் கோயில்களில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம்முடைய சேகர் பாபு மிக விளக்கமாக, தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார், மேற்கொண்டு நான் அதற்கு விளக்கம் சொல்ல விரும்பவில்லை.

நான் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன், இதுவரைக்கும் 5500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் இடங்கள், சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது என்றால், அது திமுக ஆட்சியில்தான். உள்ளபடியே, அவர்களுக்கு பக்தி என்று ஒன்று இருந்தது என்றால், என்ன செய்யவேண்டும் என்று சொன்னால், திமுக ஆட்சியைப் பாராட்டவேண்டும். அந்த பக்தி இல்லை, பகல் வேஷம். மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த நிலையில்தான் இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒரு போலீஸ் அதிகாரி, பெயர் சொல்ல விரும்பவில்லை, அவர் தனது official whatsapp-இல் ஒரு செய்தியைப் போட்டு இருக்கிறார். வழக்கு போட்டு இருக்கிறோம். பத்திரிகையில் இன்றைக்கு வரும் நீங்கள் பாருங்கள். எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் எல்லாம் பயன்படுத்தவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x