

சென்னை: ‘உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி’ என்ற பெருமைக்குரிய, தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் 1927-ல் மீரா சாகிப் - கதீஜா பீவி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் எம்.பாத்திமா பீவி(96). திருவனந்தபுரத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த அவர், அரசு சட்டக் கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் வென்றார். பின் 1950-ல் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கி நீதித் துறையில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
பின்னர் 1974-ல் மாவட்ட அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 1983-ம் ஆண்டு கேரளாவில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1989-ல் உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாகப் பதவியேற்றார்.
முதல் இஸ்லாமியப் பெண் நீதிபதி என்ற சிறப்புக்கும் உரியவர். நீதியரசர் பணியில் இருந்து 1992-ல் ஓய்வுபெற்ற பிறகு 1993 முதல் 1997 வரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து 1997 முதல் 2001 வரைதமிழகத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.
அதன்பிறகு கேரளாவில் கொல்லம் பகுதியில் வசித்து வந்த பாத்திமா பீவி, வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவால் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், நீதிபதியுமான எம்.பாத்திமா பீவியின் மறைவு ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. மக்கள் சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழக முன்னாள் ஆளுநரும், உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி மறைந்ததை அறிந்து வருந்துகிறேன். பல உயர் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிய பாத்திமா பீவியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், வி.கே.சசிகலா, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.