

கோவை:திருப்பூர் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ நிதி நிறுவனம், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம், ரூ.930.71 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
கோவையில் உள்ள தமிழ்நாடுமுதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) இந்தவழக்கை விசாரித்து, இயக்குநர்களுக்கு சிறை தண்டனை விதித்தது. இதற்கிடையில், மோசடி வழக்கில் நிதி நிறுவன இயக்குநர்களைக் காப்பாற்றுவதற்காக ரூ.2.50 கோடி லஞ்சம் பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ தனியே வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய 2 முறை அழைப்பு விடுக்கப்பட்டும், தற்போது கரூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவனதலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐ.ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அப்போது, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிரமோத்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, கோவை சிபிஐநீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் நேற்று உத்தரவிட்டார்.
மேலும், வரும் 28-ம் தேதிவழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்குஐ.ஜி. பிரமோத்குமார் உட்படகுற்றம் சாட்டப்பட்ட 5 பேரும்ஆஜராக வேண்டும் எனவும்நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் வி.சுரேந்திர மோகன் ஆஜரானார்.