Published : 24 Nov 2023 08:16 AM
Last Updated : 24 Nov 2023 08:16 AM

கனமழையால் நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு: கோவையில் வேகமாக நிரம்பும் குளங்கள்

பேரூர் படித்துறையை மூழ்கடித்தபடி செல்லும் நொய்யலாற்று வெள்ளநீர். படங்கள் : ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், மாவட்டத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக பேரூர் நொய்யலாற்றில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரூர் படித்துறையை மூழ்கடித்த படியும், அங்குள்ள தரைப் பாலத்தை தொட்டபடியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் இடத்தையும் நொய்யலாற்று வெள்ளம் மூழ்கடித்தது. வெள்ளப் பெருக்கு காரணமாக குளங்கள், தடுப்பணைகளிலும் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. குறிப்பாக, சித்திரைச் சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, சிங்காநல்லூர் தடுப்பணை உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நரசீபுரம் அருகேயுள்ள பாம்பேகாரர் தோட்டம் என்ற இடத்தில், தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் நொய்யலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நரசீபுரம் - சின்னாறு பாலத்துக்கு கீழ் பகுதியில் ஆற்றின் கரையோரம் இந்த கண்டெய்னர் பெட்டி கிடந்தது. அதில் தொழிலாளர்கள் யாரும் தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

கனமழையால் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, கோவை குனியமுத்தூர் சுண்ணாம்புக் காளவாய் தடுப்பணையில் நேற்று சீறிப்பாய்ந்தபடி வெளியேறிய மழை நீர்.

சித்திரைச் சாவடி தடுப்பணையை தாண்டி நொய்யலாற்றில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கு மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பலத்த மழையின் காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, நொய்யலாற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், குறிச்சிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்த குளங்களுக்கு நொய்யல் ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து சொட்டையாண்டி குட்டை குளம் 70 சதவீதமும், குறிச்சிக்குளம் 40 சதவீதமும், பேரூர் பெரியகுளம் 15 சதவீதமும், நரசாம்பதி குளம் 90 சதவீதமும் நிரம்பின. செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் ஆகியவை நிரம்பி உபரி நீர் கால்வாய்களில் வழிந்தோடியது. இதே அளவுக்கு அடுத்த சில வாரங்களுக்கு மழை நீடித்தால், அனைத்து குளங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழையால் கணுவாய் - பன்னிமடையில் உள்ள தாளியூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது. இப்பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தடுப்பணையில் இருந்து சின்னவேடம்பட்டி ஏரிக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

சித்திரைச்சாவடி தடுப்பணையில் கரைபுரண்டோடும் வெள்ளம்.

இது குறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘கடந்தாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் படித்துறையை ஒட்டியவாறு மழைநீர் சென்றது. அதேசமயம், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஆனால், தற்போதைய வட கிழக்கு பருவ மழைக்காலத்தில் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x