

மேட்டுப்பாளையம் / கோவை: நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 12 அடி அதிகரித்து, 89 அடியாக உயர்ந்தது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை, காரமடை அருகே நீலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கன மழையால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 77 அடியில் இருந்து 89 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையில் இருந்து மின் உற்பத்தி செய்ய விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் பொது மக்கள் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையிலும் மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 96 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியிருந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 30.27 அடியாக இருந்தது.