

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த குயில் ஹில்ஸ், மௌண்ட் பிளசன்ட், உமரி காட்டேஜ், பாலவாசி பங்க், முத்தாலம்மன் கோயில் தெரு, மேல்குன்னூர் மற்றும் கோத்தகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
முத்தாலம்மன் பேட்டை அங்கன்வாடி மையத்தில் தங்கியுள்ள நபர்களை சந்தித்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். பின்னர், அவர்கள் கூறியதாவது: மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மழை நீர் புகுந்துள்ள சுமார் 25 வீடுகளில் வசித்தவர்கள் பள்ளி கூடங்கள், மழை நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் சாலையில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடர்பாடுகளை 4 மணி நேரத்தில் நீக்கி போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தொடந்து கண்காணித்து வருகிறது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், சேதங்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது" என்றனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், வட்டாட்சியர் கனி சுந்தரம் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.