

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,"நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 9-ம் தேதி பரவலாக பெய்த மழையில் மண் சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் - குன்னூர் - உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் பாறைகள், மரங்கள் விழுந்து சேவை பாதிக்கப்பட்டது.
சீரமைப்பு பணி நிறைவடைந்து, கடந்த 19-ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மீண்டும் தண்டவாளத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள், பாறைகள் விழுந்துள்ளன.
மேலும், நீலகிரி மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மோசமான கால நிலை காரணமாக சீரமைப்பு பணிகள் நடப்பதில் சிக்கல் நிலவுவதாலும் குன்னூர் - உதகை இடையே வரும் 30-ம் தேதி வரையும், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே வரும் டிசம்பர் 7-ம் தேதி வரையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.