Published : 23 Jan 2018 11:46 AM
Last Updated : 23 Jan 2018 11:46 AM

‘நீரா’ உற்பத்தி செய்யும் தோட்டங்களில் பானை, பாளைகளை சேதப்படுத்திய போலீஸார்: திருப்பூர் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்

‘நீரா’ பானம் உற்பத்தி செய்யும் தோட்டங்களில் அத்துமீறி நுழைந்த போலீஸார், பானைகளை உடைத்தும், பாளைகளை சேதப்படுத்தியதாகவும் கூறி, திருப்பூர் ஆட்சியரை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.கே.டி. பொன்னுசாமி, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் தலைமையிலான ‘நீரா’ பானம் உற்பத்தி செய்யும் விவசாயிகள், திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியை முற்றுகையிட்டு கூறியதாவது:

திருப்பூர் மாவட்டம் மங்கலம், வேலாயுதம்பாளையம், கல்லம்பாளையம், காமநாயக்கன்பாளையம், குள்ளம்பாளையம், ஊதியூர், வஞ்சிபாளையம், பொங்கலூர், குருக்கபாளையம் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயிகள் ‘நீரா’ உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (நேற்று) அதிகாலை மேற்கண்ட பகுதிகளிலுள்ள ‘நீரா’ உற்பத்தி தோட்டங்களில் அத்து மீறி நுழைந்த போலீஸார், எந்த வித காரணங்களும் இன்றி தென்னை மரங்களில் ‘நீரா’ எடுக்க வைக்கப்பட்டிருந்த மண் பானைகளை உடைத்ததுடன், மரத்தில் உள்ள பாளைகளையும் சேதப்படுத்தினர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்னையில் இருந்து ‘நீரா’ இறக்கி விற்பது தொடர்பாக கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதல்வர் கே.பழனிசாமி வரை அனைவரிடமும் கோரிக்கை வைத்தோம். தற்போது, ‘நீரா’ இறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. மரத்தில் இருந்து ‘நீரா’ இறக்கி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மூலமாக பாட்டிலில் அடைத்து, முறையாக விற்பனை செய்து வருகிறோம்.

இந்நிலையில், தோட்டங்களில் சோதனையில் ஈடுபட்ட போலீஸார், மண் பானைகளை உடைத்தும், பாளைகளை சேதப்படுத்தியும் விவசாயிகளை தரக்குறைவாக பேசி உள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சோதனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர்.

சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து எஸ்.பி.-யிடம் விசாரிப்பதாகவும், சார் ஆட்சியர் தலைமையில் வேளாண் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் தலைமையில் கூட்டம் நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர்.

தென்னங்கள் விற்பனை

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமா கூறும்போது, ‘தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பதாகக் கூறிதான், மதுவிலக்கு மற்றும் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட மாவட்ட போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், ‘நீரா’ இறக்குவது தொடர்பாக அரசிடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் கிடைக்கவில்லை. விவசாயிகள் இறக்கியது தென்னங் கள்தான்’ என்றார்.

கலயத்தை உடைக்கலாமா?

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘தமிழகத்தில், 1967-ம் ஆண்டு முதல் உணவு, மது, போதைப் பொருட்களுக்கு வித்தியாசம் தெரியாமல்தான் ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்துகின்றனர். அரசியலமைப்பு உணவு சட்டப்படிதான் கள்ளோ, நீராவோ அல்லது பதநீரோ இறக்குகிறோம்.

பிஹார், கேரளா மாநிலங்களில் மதுவுக்கு தடை விதித்தபோது, கள்ளுக்கு தடை விதிக்கப்படவில்லை. இட்லி, பழைய சோறு என அனைத்திலும் எத்தனால் உள்ளது. கள் இறக்குகிறார்கள் என்றால் வழக்கு பதிவு செய்யுங்கள். அதைவிடுத்து, கலயத்தை உடைப்பதற்கு யார் அதிகாரம் தந்தது. வரம்புமீறி செயல்பட்ட போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x