

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலாடியில் 174 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் கன மழை பெய்ததால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
வடகிழக்குப் பருவமழை ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்து வருகிறது. இதில் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்ததால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் இரண்டு குடிசை வீடுகள் பகுதியாகச் சேதமடைந்தன.
குறிப்பாக ராமநாதபுரம் நகரில் மகர் நோன்பு பொட்டல், தங்கப்பா நகர், கேணிக்கரை, அகில் கிடங்கு தெரு பகுதிகளில் மழை நீரும், பாதாள சாக்கடை கழிவுநீரும் தேங்கியுள்ளதால் பொது மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகச் சாலைகளில் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகளும், பொது மக்களுக்கும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
தகவலறிந்த ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்தார். அப்போது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சாலைகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்டு பொதுப்பணித் துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் நேற்று பதிவான மழையளவு (மி.மீட்டரில்): அதிகபட்சமாக கடலாடி-174 மி.மீ., வாலி நோக்கம்- 146.4, கமுதி- 74.8,முதுகுளத்தூர்- 80, பரமக்குடி- 88.4, ராமநாதபுரம்- 85.6, பள்ளமோர்குளம்- 8.7, ஆர்.எஸ்.மங்கலம்- 66, மண்டபம்- 20.2, பாம்பன் 20.6, ராமேசுவரம்- 54, தங்கச்சிமடம்- 36, தீர்த்தாண்டதானம்- 72.1, திருவாடானை- 42, தொண்டி- 82.2, வட்டாணம் 70.8 என மாவட்டத்தில் ஒரே நாளில் 1121.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் கன மழை பெய்ததால் கடலாடி, முது குளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் பயிரிட்ட நெல், மிளகாய், மல்லி, உளுந்து, வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாயல் குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது.
சாயல்குடி அருகே அவதாண்டை கிராமத்தில் நள்ளிரவில் இடி, மின்னல் மழையால், விவசாயி வீரன் என்பவரின் ஓட்டு மாட்டுத் தொழுவம் இடிந்து விழுந்ததில் பசு மாடு உயிரிழந்தது. சில மாடுகள், கன்றுகள் காயத்துடன் உயிர் தப்பின. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.