

ஈரோடு: மது விற்பனையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை. உண்மையில், அதன் நுகர்வை குறைக்க விரும்புகிறோம், என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
தமிழக அரசின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த, ‘எழுத்தாளர் கலைஞர் முத்தமிழ் தேர்’ அலங்கார ஊர்தி நேற்று ஈரோடு வந்தடைந்தது. வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, எம்பி கணேசமூர்த்தி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், மேயர் நாகரத்தினம் உள்ளிட்டோர் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளித்தனர். கருங்கல்பாளையம் அரசு பள்ளி மாணவர்கள் வாகனத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: டாஸ்மாக் டெட்ரா பேக்குகள் மூலம் மது பானங்களை விற்பனை செய்வது குறித்து ஆராய அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மற்ற மாநிலங்களில் ஆய்வு செய்து வருகிறது. குழுவின் அறிக்கை கிடைத்ததும், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் முடிவுக்கு பிறகு டெட்ரா பேக் முறை அறிமுகம் செய்யப்படும். மது பானங்களை டெட்ராபேக்குகளில் விற்பனை செய்யும் போது, சுற்றுச்சூழல் மாசு பிரச்சினையை ஏற்படுத்தாது.
மது விற்பனையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை. உண்மையில், அதன் நுகர்வை குறைக்க விரும்புகிறோம். மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்போம். அதேபோல, மதுக்கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி திறந்து விற்பனை நடைபெற்றால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.