Published : 24 Nov 2023 04:08 AM
Last Updated : 24 Nov 2023 04:08 AM

நெல்லையில் 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியில் இருந்து நீக்கம் - பின்னணி என்ன?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக 3 திமுக கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். மாநகராட்சி தேர்தலின் போது திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலராக இருந்த மு. அப்துல் வகாப் எம்எல்ஏ-வின் பரிந்துரைப்படியே இக்கவுன்சிலர்கள் சீட் பெற்றிருந்தனர்.

இதனால் அப்துல்வகாப் மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே ஏராளமான திமுக கவுன்சிலர்கள் செயல்படுகிறார்கள். அதே நேரத்தில் மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் மற்றும் அப்துல்வகாபுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவது, கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவது, போராட்டங்களில் ஈடுபடுவதாக கட்சி தலைமைக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

நீடிக்கும் மோதல் போக்கு: திருநெல்வேலி மாநகராட்சி திமுக கோஷ்டி பூசல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவை கட்சி தலைமை அனுப்பி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. மக்களவை தேர்தல் நெருங்குவதால் தேவையில்லாமல் மோதிக்கொள்ள வேண்டாம் என்றும் அனைவரும் இணைந்து செயல்படுங்கள் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். அதன் பின்னரும் கவுன்சிலர்கள் மோதல் போக்கை கைவிடாதது கட்சி தலைமைக்கு தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 21-ம் தேதி மாநகராட்சி அலுவலத்தில் திமுக கவுன்சிலர்கள் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கு எதிராக இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையிலான மோதல் போக்கு காரணமாக திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் முடங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. திருநெல்வேலி மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

3 கவுன்சிலர்கள் நீக்கம்: இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் கோஷ்டி பூசலுக்கு காரணமாக செயல்படும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் கவுன்சிலர்களை கண்காணிக்க ரகசிய குழு ஒன்றை திமுக தலைமை அமைத்ததாக கூறப்படுகிறது. அந்த குழுவின் பரிந்துரைப்படி தற்போது 3 திமுக கவுன்சிலர்களையும், திமுக கவுன்சிலரின் கணவரையும் கட்சியிலிருந்து நீக்கி கட்சி தலைமை அதிரடி காட்டியிருக்கிறது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், திருநெல்வேலி மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ், 20-வது வார்டு கவுன்சிலர் மன்சூர், 24-வது வார்டு கவுன்சிலர் ரவீந்தர் மற்றும் 7 -வது வார்டு கவுன்சிலர் இந்திரா மணியின் கணவரும் திமுக பிரதிநிதியுமான மணி என்ற சுண்ணாம்பு மணி ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருநெல்வேலி திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x