

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே பலத்த மழையால் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல இலந்த குளம் பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த மழையால் நீராதாரங்களில் தண்ணீர் பெருகியது. மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட பெரும்பாலான குளங்கள் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இதனால் பெருக்கெடுத்த தண்ணீர் மேலஇலந்த குளம் பகுதியில் தரைப் பாலத்தை மூழ்கடித்தவாறு பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் செல்லும் நெடுஞ்சாலையில் மேல இலந்த குளம் தரைப் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் பாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளம் இழுத்துச் செல்லும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.
அத்துடன் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், டிராக்டர் உள்ளிட்டவையும் வெள்ளத்துக்கு மத்தியில் ஆபத்தான முறையில் தரைப் பாலத்தை கடந்து சென்றன. அப்பகுதியிலுள்ள குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. 18 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப் பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.