

அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. சென்னை மெரினாவில் அமைந்துள்ள நேதாஜி சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கனவு கண்டாரோ அனைத்தும் அவரது வழியில் நிறைவேற்றப்படுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின்படியே ஆளுநர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை. முதல்வர் தலைமையில் அரசு சீராக செயல்பட்டு வருகிறது. ஆட்சியை கவிழ்க்க நடத்தப்பட்ட சதிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்
பஸ் கட்டண உயர்வு ஏன்?
மேலும் போக்குவரத்து துறையை சீர் செய்து புதிய பேருந்துகளை வாங்கவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, "டிடிவி தினகரன் சிறைக்கு செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது" என்றார்.