

பத்திரிகையில் வந்த செய்தியை கண்டித்து, அண்ணா சாலையில் கல்லூரி மாணவிகள் திடீரென மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம், புளியந்தோப்பு ஆகிய இடங்களிலும் வெவ்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மறியல் நடந்தது.
சென்னை காயிதே மில்லத் மற்றும் எத்திராஜ் பெண்கள் கல்லூரி மாணவிகள் இணைந்து, அண்ணா சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீர் மறியல் செய்தனர். ‘கல்லூரி பெண்கள்’ என்ற தலைப்பில் ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்து, ஸ்பென்சர் பிளாசா எதிரே அண்ணா சாலையில் கல்லூரி மாணவிகள் மறியல் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர். இந்த மறியலால் அண்ணா சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரத்தில் மறியல்
சென்னை மேற்கு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே முத்துலிங்க முதலி தெருவில் ஓட்டல்கள், வணிக வளாகம் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ரயில் நிலையம் செல்பவர்கள் அந்த பாதை வழியாக செல்ல வேண்டும். ஷேர் ஆட்டோக்களும் இந்த வழியாகவே செல்லும். இதனால் எப்போதும் அந்த சாலை நெரிசல் மிகுந்ததாக இருக்கும். வெள்ளி கிழமை காலை முத்துலிங்க முதலி தெருவில் கடைகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு போக்குவரத்து போலீஸார் பூட்டு போட்டு அபராதம் வசூலித்தனர். இதற்கு பொது மக்களும், வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போலீஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாம்பரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களையும், வியா பாரிகளையும் சமாதானப்படுத்தி மறியலை கைவிட வைத்தனர்.
சாக்கடையால் மறியல்
சென்னை புளியந்தோப்பு கன்னிகா புரம் பகுதிகளில் பாதாள சாக்கடை யில் ஏற்பட்ட அடைப்பால் பல தெருக்களில் கழிவுநீர் ஓடி சாக் கடையாக மாறிவிட்டது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வெள்ளிக்கிழமை காலை அம்பேத்கர் கல்லூரி சாலை யின் அருகே மறியலில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு போலீஸார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.