Published : 23 Nov 2023 05:46 AM
Last Updated : 23 Nov 2023 05:46 AM
சென்னை: நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையின் ரூ.750 கோடி சொத்துகளை முடக்கியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக, மக்களின் குரலாக ஜவஹர்லால் நேரு ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை இன்றைய ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளது.
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து வெற்றி கண்ட நேஷ்னல் ஹெரால்டு, இன்றைய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கையும் நிச்சயம் முறியடித்துக் காட்டும்.
சோனியா காந்தி, மன்மோகன்சிங் ஆகியோரை ஏதாவது ஒரு வகையில் ஊழல் வழக்கில் சிக்க வைக்க பிரதமர் மோடி அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் 2014-ல் சுப்பிரமணிய சுவாமி கொடுத்த புகாரை பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் நேஷ்னல் ஹெரால்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறை ரூ.750 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
சில முன்னறிவிப்பு அல்லது முக்கிய குற்றத்தின் விளைவாக மட்டுமே பணமோசடி தடுப்பு நடவடிக்கை இருக்கும். அசையா சொத்தை மாற்றவில்லை. இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனையோ குற்ற நடவடிக்கையோ இல்லை. அப்படி இருக்க இந்த நடவடிக்கை என்பது 5 மாநில பேரவை தேர்தலில் அடையப்போகும் தோல்விகளிலிருந்து திசை திருப்பவே நடத்தப்படுகிறது. பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டது.
இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கை.இத்தகைய அற்பத்தனமான பழிவாங்கும் உத்தியை வைத்து எந்த வகையிலும் காங்கிரஸை அச்சுறுத்த முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT