முறைகேடு புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காமராஜ் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை பதில்

முறைகேடு புகாருக்கு முகாந்திரம் இருந்தால் காமராஜ் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை பதில்
Updated on
1 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாருக்கு உரிய முகாந்திரம் இருந்தால், மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர், பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்ததாகவும், லஞ்சமாக பெற்றதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது இதே முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள புகார் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2021 காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்யும் டெண்டர் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் முகவரி உள்ளிட்ட முழு விவரங்களை வழங்குமாறு தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மேலும், இந்த டெண்டர்களில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற நிறுவனங்களின் விவரங்களை அளிக்குமாறு கம்பெனிகளின் பதிவாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் தொடர்பாக 48 டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 24 ஆயிரம் பக்க ஆவணங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவை.

காமராஜுக்கு எதிரான முறைகேடு புகார்கள் தொடர்பாக விரிவான ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், உரிய முகாந்திரம் இருந்தால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இன்னும் எண் வழங்கப்படவில்லை என்று, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அறப்போர் இயக்கம் தாக்கல் செய்துள்ள மனுவும் அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in