Published : 23 Nov 2023 05:43 AM
Last Updated : 23 Nov 2023 05:43 AM

மாநகர போக்குவரத்து கழக நிலையாணை செல்லாது: தொழிலாளர் கூடுதல் ஆணையர் உத்தரவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிலையாணை செல்லாது என தொழிலாளர் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிலையாணை அடிப்படையில் ஊழியர்களின் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு மற்றும் தொழிலாளர் துறை சார்பில் சான்றிடப்படாத நிலையாணையை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை, தொழில்நுட்ப பணியாளர்கள் நலச் சங்கம், போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற க.கோதண்டன் ஆகியோர் சார்பில் தொழிலாளர் நலத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மனிதவள பிரிவு முதுநிலை துணைமேலாளர் எல்.ஷியாமளா உள்ளிட்டோர் ஆஜராகி, “தொழிலாளர் நீதிமன்றத்தால் பல்லவன் போக்குவரத்துக் கழக நிலையாணை சான்றிடப்பட்டது. பின்னர், போக்குவரத்துக் கழகத்தின் பெயர் மாநகர போக்குவரத்துக் கழகமாக மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து, பல்லவன் போக்குவரத்துக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு நிலையாணையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, 1995-ம் ஆண்டு அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்ட பொதுவான நிலையாணை மீது வழக்கு நடந்து வருவதால், 1978-ம் ஆண்டு நிலையாணை பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.

இதையடுத்து, தொழிலாளர் கூடுதல் ஆணையர் உமாதேவி பிறப்பித்த உத்தரவில், “மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு 1995-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட நிலையாணையே பொருந்தும்” என தெரிவித்துள்ளார். இதன்மூலம் பழைய நிலையாணையின்படி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவையின் எம்டிசி பிரிவு பொதுச்செயலாளர் கே.அன்பழகன் கூறியதாவது: பணிமனை, போக்குவரத்துக் கழகங்கள் இடையே தண்டனைக்கான பணியிடமாற்றம் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தே பொதுவான நிலையாணை மீது வழக்கு உள்ளது.

தொழிலாளர் துறையின் இந்த உத்தரவு மூலம் நீதிமன்ற வழக்கையும் முடிவுக்குக் கொண்டுவர முடியும். பணியிட மாற்றம் தவிர்த்து இதர தண்டனைகள் ஒரே அளவில் இருப்பதால் விரைவில் பொதுவான நிலையாணை அமலுக்கு வரக்கூடும். இந்த உத்தரவு மூலம் சுமார் 1.50 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x