Published : 23 Nov 2023 05:25 AM
Last Updated : 23 Nov 2023 05:25 AM

வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்துக்கு கணக்காயர்கள் உதவி புரிகின்றனர்: தமிழிசை பாராட்டு

சென்னை: நல்ல, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்துக்கு கணக்காயர்கள் உதவி புரிகின்றனர் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையால் நடத்தப்பட்ட தணிக்கை வார விழா நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநில பொது கணக்காயர் டி.கே.சேகர் வரவேற்றார். தெலங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை நிறுவனம் கடந்த 1860-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கணக்குத் தணிக்கை நிறுவனம் அதிகாரிகளுக்கும், அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஒரு மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்பது பழைய பழமொழி. ஒரு மருத்துவரிடமும், ஒரு வழக்கறிஞரிடமும், ஒரு கணக்காயரிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்பது புது மொழி.

அரசாங்க திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களை சரியாக சென்றடைகிறது என்பதை நீங்கள் கண்காணிக்கிறீர்கள். கணக்கில்லாமல் செல்வதைக் கணக்கிடுவதற்கு கணக்காயர்கள் உதவி செய்கின்றனர்.

கணக்கில்லாமல் இருப்பதைவிட கணக்காயரிடம் தணிக்கை செய்து கொண்டால் பயமில்லாமல் இருக்கலாம்.

நமது நிதி எந்த அளவுக்கு சரியாக செலவிடப்படுகிறது என்பதை கணக்காயர்கள் கணக்கிடுகின்றனர். நிதி அதிகமாக செலவிடப்படக் கூடாது, நிதி சுருட்டப்படக் கூடாது என்பதை எச்சரிக்கின்றனர். மொத்தத்தில் கணக்காயர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்கும்போது நமது நிதி பாதுகாப்பாக இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு சொல்வதுதான் இந்த தணிக்கை வாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை என்பது அரசாங்கத்துக்கு எதிரான ஓர் அறிக்கை என தவறான எண்ணம் உள்ளது. உண்மையில், அரசின் வரவு-செலவுகளை முறைப்படுத்தும் ஓர் அறிக்கையாகும். அதை நேர்மறையான எண்ணத்துடன் அணுக வேண்டும்.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி அடையும் என பிரதமர் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு சிலதினங்களுக்கு முன்பு 4 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது. நல்ல, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்துக்கு கணக்காயர்கள் உதவி புரிகின்றனர்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x