

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.929.37 கோடி மதிப்பில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அம்ருத் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் த.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.330.12 கோடியில் காரைக்குடி, ராஜபாளையம் நகராட்சிகள், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிராப்பள்ளி, தாம்பரம், கடலூர், ஈரோடு, ஆவடி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வாரம் முழுவதும் குடிநீர் வழங்கும் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் காரைக்குடி நகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.33.71 கோடியிலும், மதுரை மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.452.42 கோடியிலும் பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் ரூ.11.07 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகளை புனரமைக்கும் 17 பணிகளும், ரூ.8.94 கோடி மதிப்பீட்டில் பசுமை வெளிகள், பூங்காக்களை உருவாக்குவதற்கான 27 பணிகளும் செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம் மோகனூர் மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளுக்கு ரூ.46.74 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள், பல்வேறு பேரூராட்சிகளில் மொத்தம் ரூ.17.49 கோடி மதிப்பில் நீர்நிலைகளை புனரமைக்கும் 59 பணிகள், ரூ.27.91 கோடியில் பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்களை உருவாக்குவதற்கான 110 பணிகளும் செயலாக்கத்துக்கு எடுக்கப்படுகின்றன.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.97 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.929.37 கோடி மதிப்பீட்டில் 230 பணிகளை செயல்படுத்த முதல்வர் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.