

மத்திய அரசு வரும் 10-ம் தேதி தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட்டாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அச்சம் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட டி.ராஜா, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதாகவும், ரயில் மற்றும் பாதுகாப்பு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை அமல்படுத்தப் போவதாகவும் பேசப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் சேவைகளுக்கான மானியம் குறைக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.
பட்ஜெட்டுக்கு முந்தைய இந்த அறிகுறிகள் நல்லதாக இல்லை. எனவே, வரும் 10-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட்டாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் என்ன என்பது அம்பலமாகும். அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தங்களிடம் மந்திரக்கோல் இல்லை என்று மோடி அரசு கூறுகிறது. இது குறித்தும், இலங்கை மீனவர், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேள்வி எழுப்ப வேண்டும்.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.