

கடலூர் / விழுப்புரம்: கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலையும் மழை பெய்தது. மழை காரணமாக தென்பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக செல்கிறது. முக்கிய சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழையால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பியுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய மழையளவு: பரங்கிப்பேட்டையில் 129.4 மி.மீ, கொத்தவாச்சேரியில் 106 மி.மீ, குறிஞ்சிப்பாடியில் 65 மி.மீ, வடக்குத்தில் 52 மி.மீ,விருத்தாசலத்தில் 50 மி.மீ, சேத்தியாத் தோப்பில் 39 மி.மீ, புவனகிரியில் 33 மி.மீ, கடலூரில் 23.1 மி.மீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 16.2 மி.மீ, அண்ணாமலை நகரில் 14 மி.மீ, சிதம்பரத்தில் 10.2 மி.மீ, காட்டு மன்னார்கோவிலில் 4 மி.மீ மழை பெய்தது.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த10 நாட்களுக்கும் மேலாக கனமழை இல்லாமல் மிதமான மழை காணப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பெய்த மிதமான மழையால் நேற்று பள்ளிகள், கல்லூரிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்தும் சற்று குறைந்து காணப்பட்டது. விழுப்புரம் நகரில் உள்ள கீழ்பெரும்பாக்கம் தரைப் பாலம், நகராட்சி மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று மாலை முதல் மிதமான மழைபெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு: வானூர் - 8 மி.மீ, திண்டிவனம் - 18 மி.மீ, வல்லம் - 41 மி.மீ, மரக்காணம் - 21 மி.மீ, கோலியனூர் - 2 மி.மீ மழை பெய்தது.