

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
2017-ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% பேர் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய சராசரியைவிட அதிகமாகும்.
உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோலின்படி ஒரு குழந்தை அதன் உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் இருந்தாலோ, அல்லது பார்ப்பதற்கு மிகவும் மெலிந்து காணப்பட்டாலோ, உள்ளங்கால்கள் வீக்கம் கண்டிருந்தாலோ அக்குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படிருக்கிறது என்று அர்த்தம்.
தமிழகம் மற்றும் கேரளாவுக்கான யுனிசெப் அமைப்பின் தலைவர் ஜோப் சக்காரியா தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறும்போது, "தமிழகத்தைப் பொருத்தவரை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து தெளிவான ஆய்வு இல்லை. மாநிலத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டமும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எடை - உயரத்தை சரியாக கணக்கிடுவதில்லை. அதற்கான வசதி அவர்களிடம் இல்லை என்றுதான் கூறவேண்டும். குழந்தைகளில் எடை, உயரத்தை கணக்கிடுவதில் இன்ச் டேப் பயன்படுத்தி புஜத்தின் சுற்றளவை அளக்கும் முறையை அமல்படுத்த நாங்கள் மாநில அரசுக்கு பரிந்துரைக்கவுள்ளோம். இதன் மூலம், அங்கன்வாடி மைய ஆசிரியர்களே குழந்தைகளின் புஜ சுற்றளவை அளந்துவிட முடியும். அவ்வாறு அளக்கும்போது 11.5 செ.மீ.க்கு குறைவாக அந்த அளவு இருந்தால் அந்தக் குழந்தை நிச்சயமாக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது" என்றார்.
ரத்தசோகை பாதிக்கப்பட்ட பெண்கள்:
மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குநர் ஆர்.கண்ணன் கூறும்போது, "ஊட்டச்சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கு அவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.
தமிழகத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 2% கருவுறும் தருவாயில் இருக்கும் பெண்களுக்காவது ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதை இலக்காக கொண்டிருக்கிறோம்.
அதேபோல் சுகாதாரமின்மையும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்பட வழிவகுக்கிறது" என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே.குழந்தைசாமி கூறும்போது, "பொது இடத்தில் மல, ஜலம் கழிப்பது, பொது சுகாதாரமின்மை ஆகியன மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சினையை உருவாக்குகின்றன. பொது இடத்தில் மலம் கழித்தல் கர்ப்பிணிப் பெண்களையும், குழந்தைகளையும் குடற்புழுக்கள் தாக்கத்துக்கு உள்ளாக்குகிறது. இது, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை உருவாக்குகிறது" எனக் கூறினார்.
பல்துறை அணுகுமுறை..
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள், "மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சினையை சீரமைக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. சுகாதாரத் துறை முதல் சத்துணவு துறை வரை எல்லா துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டாலேயே தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டைச் சீரமைக்க முடியும் என்றனர்.
பேராசிரிய எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, "ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் ஊட்டச்சத்தை உறுதி செய்ய மிகவும் அவசியமான காலக்கட்டமாகும். அதேபோல். வயது வந்தோரும் அரிசி, கோதுமையுடன் பலதரப்பட்ட தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஒரு மனிதர் ஒரு மாதத்துக்கு 5 கிலோ உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது மட்டுமே ஆரோக்கியத்துக்கு போதுமானது அல்ல. எனவே, நம் தேசம் உணவுப் பாதுகாப்பில் இருந்து ஊட்ட்சத்து பாதுகாப்பை நோக்கி நகர வேண்டும்" என்றார்.
தமிழில்: பாரதி ஆனந்த்.