Published : 22 Nov 2023 05:47 AM
Last Updated : 22 Nov 2023 05:47 AM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகள் நிலம் வாங்க குறைந்த வட்டியில் கடன்: ஐஓபி-யுடன் தாட்கோ புதிய ஒப்பந்தம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலம் வாங்குவதற்கு குறைந்தவட்டியில் கடன் வழங்க தாட்கோமற்றும் இந்தியன் ஓவர்சீஸ்வங்கி (ஐஓபி) இடையே,அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தாட்கோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், நேற்று இந்தியன் ஒவர்சீஸ் வங்கியுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .கடந்த 2022-23-ம் ஆண்டு சட்டப்பேரவையில் , ‘200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ. 10 கோடி மானியம் தாட்கோ மூலம் வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 2022செப்.10-ம் தேதி வெளியிடப்பட்டது.

விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5லட்சம் வரை மானியம் வழங்கப்படும் இத்திட்டத்தின் மூலம்ரூ.10 கோடி மதிப்பீட்டில் 200நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ரூ. 3.75 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டு 87 விவசாயிகள் நிலம் வாங்கியுள்ளனர்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்தங்களுடைய நில உடைமையை அதிகரிக்க அரசுதாட்கோ மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோது அவர்களுக்கு எளிய முறையில் வங்கியில் நிதி வசதிகிடைக்காததால், பயனாளிகள்நிலம் வாங்கும் திட்டத்தில் சொற்ப அளவே பயனடைந்தனர்.

இந்த நிலையை மாற்ற, தாட்கோ மூலம் நடவடிக்கை மேற்கொண்டு தற்போது தேசிய பட்டியலினத்தோர் நிதிமேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதியை பெற்று பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடனுடன் மானியம் பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்றுஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலையில், தாட்கோ மேலாண் இயக்குநர் க.சு.கந்தசாமி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் சஞ்சய் விநாயக்ஆகியோர் இடையே ஒப்பந்தம்பரிமாற்றப்பட்டது. அப்போது,தாட்கோ தலைவர் உ.மதிவாணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர், எம். மோகன், தாட்கோ, பொது மேலாளர் (நிர்வாகம்) தா. பரிதா பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x