Published : 22 Nov 2023 05:03 AM
Last Updated : 22 Nov 2023 05:03 AM

ஆவின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதா? - அண்ணாமலை புகாருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு

சென்னை: ஆவின் பாலில் கொழுப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆவின் பால் பாக்கெட்களில் கொழுப்பின் அளவு குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி ஆய்வக பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அவர், தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல். ஏற்கெனவே, 6 சதவீதம் கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவீதம் கொழுப்பு சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில், மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. பாலில் கொழுப்பு சத்தைக் குறைத்துவிட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து மக்களை மோசடி செய்து வருகிறது என தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து ட்விட்டரில் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளதாவது:

ஆவின் பால் பிரத்யேக பாக்கெட்களில்தான் இருக்கும். ஆனால், அறிக்கையில் பெட் கலனில் பால் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உங்கள் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை. ஆவின் ஒரு குறைபாடற்ற நற்பெயரை கொண்டுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக தமிழகத்தின் நற்பெயரைக் கெடுப்பதாகத் தோன்றுகிறது. தனிப்பட்ட ஆதாயத்துக்காகவும், நமது மாநிலத்துக்கு வெளியே உள்ள நிறுவனங்களிடமிருந்து பலன்களைப் பெறவும் இவ்வாறு செய்வதாக கருதுகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, இதற்கு அண்ணாமலை பதில் அளித்து பதிவிட்டதாவது: மாதிரிகள் எப்போதும் சோதனைக்காக பெட் பாட்டில்களில் கொடுக்கப்படுகின்றன என்பது ஒரு அமைச்சருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், அந்த மாதிரிகள் நல்ல நிலையில் கொடுக்கப்பட்டதா என்பதுதான் முக்கியம். இது அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x