Published : 22 Nov 2023 05:07 AM
Last Updated : 22 Nov 2023 05:07 AM
சென்னை: சங்கர நேத்ராலயா நிறுவனர் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சங்கர நேத்ராலயா மருத்துவக் குழுமத்தின் நிறுவனரும் பிரபல கண் மருத்துவ நிபுணருமான எஸ்.எஸ்.பத்ரிநாத் (83), வயது மூப்பு காரணமாக மந்தைவெளியில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். சில உடல்நலக் குறைவு பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை 2.45 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நேற்று மாலை நடைபெற்றன. பத்ரிநாத்துக்கு, மருத்துவர் வசந்தி என்ற மனைவியும், சேஷு, ஆனந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
எஸ்.எஸ்.பத்ரிநாத் (செங்கமேடு சீனிவாச பத்ரிநாத்) 1940-ம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயது முதலே மருத்துவப் படிப்பை லட்சியமாக கொண்டிருந்தார்.1962-ம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.
நண்பர்களின் வழிகாட்டுதலின்படி அமெரிக்க பல்கலைக்கழங்களில் கண் மருத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்து, விழித்திரை மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் வந்தபோதும், அனைத்தையும் தவிர்த்துவிட்டு இந்தியாவுக்கு வந்து மருத்துவ சேவையாற்ற தொடங்கினார்.
எவ்வித லாப நோக்கமும் இல்லாமல் ஏழைகளுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கினார். 1978-ல் சங்கர நேத்ராலயா கண் மருத்துவக் குழுமம் தொடங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு முழுமையாக இலவசமாக கண் மருத்துவ சேவைகளையும், அறுவை சிகிச்சைகளையும் பத்ரிநாத் வழங்கினார். பத்ரிநாத்தின் மருத்துவ சேவையை பாராட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளன. குறிப்பாக, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பி.சி.ராய் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவர் பத்ரிநாத் மறைவுக்கு பிரதமர், முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி: தொலைநோக்கு பார்வையாளரும், கண் சிகிச்சை நிபுணரும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனருமான எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்துக்கு அவரது இடைவிடாத சேவையும் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: எஸ்.எஸ். பத்ரிநாத், சங்கர நேத்ராலயா மூலம் கோடிக்கணக்கான ஏழை எளியோரின் வாழ்வை தொட்டார். அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சேவை நோக்குடன் பத்ரிநாத் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை, பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. பத்ரிநாத் ஆற்றிவரும் பணிகளை அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா, தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார். இதன்மூலம், இத்துறையில் பத்ரிநாத் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்கு கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைகளை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொடங்கி, லட்சக்கணக்கானோருக்கு பார்வை கிடைக்க அரும்பாடுபட்டார். ஏழை, எளிய மக்களுக்கு அவர் இலவசமாக கண் சிகிச்சை அளித்தது மிகுந்த பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியதாகும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மருத்துவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT