Published : 13 Jan 2018 03:50 PM
Last Updated : 13 Jan 2018 03:50 PM

அதிமுக ஆட்சி அகலவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு: ஸ்டாலின் பேட்டி

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற ரீதியில் போகி பண்டிகை கொண்டாடும் மக்கள் இந்த ஆட்சி எப்போது அகலும் என்று எதிர்ப்பார்ப்பதாக மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

ஊடகத்துறையினருக்கு எனது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று பல்வேறு அறிஞர்களும், தமிழார்வகளும் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது.

கருணாநிதி அதற்காக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். எனவே, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதிமுக ஆட்சி வந்த பிறகு, அதை நீக்கிவிட்டார்கள். விரைவில் திமுக ஆட்சி வந்தவுடன், கருணாநிதி எந்த எண்ணத்துடன் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தாரோ, அதே நிலை மீண்டும் கொண்டு வரப்படும்.

தமிழகத்துக்கு இந்த ஆட்சியில் இருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மட்டுமல்ல, இன்றைக்கு பழையன கழிதலும், புதியன புகுதலும் என்றவகையில் மக்கள் போகியை கொண்டாடி வருகிறார்கள். எனவே, பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டுக்குப் பிடித்துள்ள சனியனையும் கழிக்கும் நிலை விரைவில் வர வேண்டுமென்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைய தினம் தை பிறக்கப்போகிறது, எனவே நிச்சயமாக ஒரு நல்ல ஆட்சியுடன் தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் வழி பிறக்கும்.

கவிஞர் வைரமுத்து குறித்து பாஜகவின் எச்.ராஜா கடும் விமர்சனங்களை தொடர்ந்து வைத்து வருகிறாரே?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்றமுறையிலும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையிலும் இதுகுறித்து நான் ஏற்கனவே தெளிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன். சில ஊடகங்கள், அதில் சிலவற்றை திரித்து, செய்தியாக வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே, நான் தெளிவாக குறிப்பிட விரும்புவது, இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதை திமுக ஊக்கப்படுத்தாது, உடன்படாது.

வைரமுத்து அவர்களே இதுதொடர்பாக மனம் திறந்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அந்த பத்திரிகையும் வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன் பிறகும் இதனை பூதாகரமாக பெரிதாக்கி, அதன் மூலமாக அரசியலுக்குப் பயன்படுத்தி, சதி செய்யும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அது தவறு. அதனை வளர விடுவது நல்லதல்ல. எனவே, அதை நான் கண்டிக்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதியும், அண்ணாவும் தமிழை வளர்க்கவில்லை என்று  எச்.ராஜா, ட்விட்டரில் தெரிவித்துள்ளாரே?

அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. தான் எப்படியாவது வளர வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட, தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்பது தான் என்னுடைய கருத்து.

உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கிருக்கின்ற நீதிபதிகளே குற்றம் சாட்டும் நிலை மத்திய பாஜக ஆட்சியில் ஏற்பட்டு இருக்கிறதே?

குமரி முனை முதல் காஷ்மீர் வரையிலும் வசிக்கும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய இடத்தில் உச்ச நீதிமன்றம் இருக்கிறது. அப்படிப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் இடையே பல சர்ச்சைகள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, அவையெல்லாம் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். எனவே, உச்ச நீதிபதிகள் அமர்ந்து பேசி, அவற்றை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, மக்களுடைய ஜனநாயகத்தைப் பாதுக்காக்க, அந்தத் துறையை நல்ல நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும்.

ஒருவேளை, நீதிபதிகளால் அதை தீர்க்க முடியாத நிலை வந்தால், இந்திய குடியரசுத் தலைவர் அதில் தலையிட்டு, சரி செய்ய வேண்டுமென்று, திமுக சார்பில் நான் மிகுந்த பணிவோடு வலியுறுத்துகிறேன்.

கருணாநிதி தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறதே?

மருத்துவர்களின் கருத்தைக் கேட்டறிந்து, அவர்கள் ஒப்புகொண்டால், அதற்காக முயற்சி எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகளுக்கு பாஜகவின் அரசியல் தலையீடே காரணம் என்று கூறப்படுகிறதே?

இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x