Published : 28 Jan 2018 10:27 AM
Last Updated : 28 Jan 2018 10:27 AM

பொதுப்பட்டியலுக்கு கல்வியை மாற்றியதால் மாநில உரிமை பறிபோய் விட்டது: சைவ சமய மாநாட்டில் பழ.நெடுமாறன் புகார்

பொதுப்பட்டியலுக்கு கல்வியை மாற்றியதால் மாநில அரசுகளின் கல்வி உரிமை பறிபோய் விட்டதாக பழ.நெடுமாறன் குற்றம்சாட்டி உள்ளார்.

சைவ சபை சார்பில், 2 நாள் சைவ சமய மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து தவத்திரு ஊரன் அடிகள் பேசும்போது, ‘இந்து சமயத்துக்கு நிறுவனர் கிடையாது. அது தானாகவே தோன்றியது. அதற்கு பிறந்த தேதி இல்லாததால், இறப்பும் கிடையாது. என்றும் அது அழியாது. இதுபோல் உலகின் மூத்த மொழி தமிழ். செம்மொழிகளில் இப்போது தமிழும், சமஸ்கிருதமும், சீனமும்தான் உள்ளன. தமிழும், சமஸ்கிருதமும் இந்தியாவில் உள்ளன. தமிழையும், சைவத்தையும் பிரிக்க முடியாது’ என்றார் அவர்.

மாநாட்டில், ‘தாய்மொழி வழிக்கல்வி’ என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் பேசியதாவது: பெற்றோர் விருப்பத்துக்கு ஏற்ப பிள்ளைகளின் கல்வி மொழி இருக்க வேண்டும் என்பதை அரசு ஏற்றதால், ஆங்கில வழிக் கல்வி தமிழகத்தில் வேகமாக பரவியது.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மோகன் தலைமையிலான குழு, 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழை கல்வி மொழியாக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டது. அது சட்டமாக்கப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைத் தொடர முடியாமல் போனது. கர்நாடகத்தில் அரசு சட்டம் இயற்றியதால் கன்னடம் தாய்மொழிக் கல்வியாக கற்பிக்கப்படுகிறது.

தமிழை படிக்காமலேயே தமிழக மாணவர்கள் பட்டமேற்படிப்பு வரை படிக்கும் சூழ்நிலை தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. பொதுப்பட்டியலுக்கு கல்வியை மாற்றி விட்டதால் மாநில அரசுகளின் கல்வி உரிமை பறிபோய்விட்டது என்றார்.

சைவசபை தலைவர் மீ.வள்ளிநாயகம் வரவேற்றார். நேற்று மாலை வரை நடைபெற்ற அமர்வுகளில், தருமை ஆதீனம் சின்னப்பண்டார சந்நிதி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், இலங்கையைச் சேர்ந்த இ.ஜெயராஜ் உள்ளிட்டோர் பேசினர். இன்று 2-வது நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பேசுகிறார்கள். தவத்திரு ஊரன் அடிகள் நிறைவுரை ஆற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x