Published : 22 Nov 2023 04:12 AM
Last Updated : 22 Nov 2023 04:12 AM
ஈரோடு / நாமக்கல்: பெருந்துறை சிப்காட் வளாகத்தில், கழிவு நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.40 கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும், என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள பொது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் கழிவு நீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.40 கோடி செலவில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்.
சிப்காட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.40 கோடியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அரசின் பங்காக ரூ.20 கோடியும், தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்களிப்பாக ரூ.20 கோடியும் செலுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த கடிதம் தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம், 157 தொழிற்சாலைகளின் 20 லட்சம் லிட்டர் கழிவு நீர் நாள்தோறும் சுத்திகரிக்கப்படும். பொது சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் 6 முதல் 8 மாதங்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
சிப்காட் வளாகத்தில் உள்ள 63 ஆயிரம் டன் திடக்கழிவுகள் 2 மாதங்களில் அகற்றப்படும். மாசடைந்துள்ள நிலத்தடி நீரை போர் வெல்கள், திறந்த வெளி கிணறுகளில் இருந்து உறிஞ்சி எடுத்து வெளியேற்றப்படும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம். விதிமுறைகளை தொழிற்சாலைகள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மேலும், சிப்காட் வளாகத்தில் உள்ள பொது இடங்களில் மரங்களை நட்டு காற்று மாசுவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் சு.முத்துசாமி, மெய்யநாதன், ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, எம்பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவச் சேவை தொடக்கம்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துச் சேவை தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மருத்துவ சேவையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதியுடன் கூடிய பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எல்லோரும் தினசரி உடற் பயிற்சி செய்தால் தான் எதிர்காலத்தில் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத் தோடு வாழ முடியும்.
அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான பணிச்சுமையை குறைக்க முடியும். சமுதாயத்தை பாதிக்கிற நோய்களைத் தீர்க்க நூலகங்களையும், மக்களை பாதிக்கிற நோய்களை தீர்க்க மருத்துவ வசதிகளையும் திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், 2,513 பயனாளிகளுக்கு ரூ.16.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலர் ககன் தீப் சிங் பேடி, ஆட்சியர் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில்,
எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.சாந்தா அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் அரசின் நோக்கம். விதிமுறைகளை தொழிற்சாலைகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT