

அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என உறுதி ஏற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுகொண்டார்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி, தேசிய கொடி, தேசிய சின்னங்களை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களை அனைவரும் காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சமூக, அரசியல்ரீதியாக அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், யாருக்கும் நீதி மறுக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டதுறை அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், ஆணையர் விஸ்வநாத், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்துக்கு பாதுகாப்பு வழங்கிவரும் சி.ஐ.எஸ்.எஃப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்துகாட்டினர்.
சி.ஐ.எஸ்.எஃப். படையை சேர்ந்த பெண் கமாண்டோக்கள் கயிற்றில் ஏறுதல், தலைகீழாக தொங்குதல், கண்களை கட்டிக்கொண்டே துப்பாக்கியை பிரித்தல், பின்னர் அதன் பாகங்களை கோர்த்தல், கட்டிடத்திலிருந்து பல்வேறு வகைகளில் குதித்தல் போன்ற சாகசங்களை நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர்.
தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி பேசியதாவது:
தனி மனித சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம் என இந்தியா அரசியல் சாசனத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியாவில் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அரசியல் சாசனம் தேசிய கொடி, தேசிய சின்னங்களை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. நதி உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களையும் காக்க வேண்டும்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது. 3 ஜனாதிபதிகளை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தியர் என்பதில் பெருமை கொள்ள வேண்டும்.
சுதந்திர போராட்டத்தில் அதிகமாக கலந்து கொண்டவர்கள் தமிழர்கள்தான். சட்ட அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நன்றி. நீதி யாருக்கும் மறுக்கப்படவில்லை என்பதை இந்த நேரத்தில் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.