

சென்னை: சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் 2.60 லட்சம் முதல் 2.80 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப, பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு லண்டனின் கிரீன் ஆப்பிள் சர்வதேச விருது கிடைத்துள்ளது. கார்பன் குறைப்பு பிரிவின் கீழ், இந்த விருதில் தங்கம் கிடைத்துள்ளது. லண்டனில் உள்ள பசுமை அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது. லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர் ராஜீவ்கே.ஸ்ரீவஸ்தவா இவ்விருதைப் பெற்றுக்கொண்டார்.
கிரீன் ஆப்பிள் விருது, உலகளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் விருதாகக் கருதப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் இந்த விருது கிடைத்துள்ளது. இந்தத் தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.