Published : 22 Nov 2023 05:52 AM
Last Updated : 22 Nov 2023 05:52 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதி அருகே கடந்த 19-ம் தேதி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த மனோகர், அவரது இரு மகள்கள் என 3 பேர், மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர். அப்போது, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணி கிடப்பில் இருப்பதால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 3 உயிரிழப்புகள் ஏற்பட்ட வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ரயில்வே துறை உயரதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம், ரயில்வே மேம்பால பணி மற்றும் ரயில்வே சுரங்கப் பாதை பணி கிடப்பில் இருப்பதற்கான காரணங்களை ஆட்சியர் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் ரயில்வே மேம்பால பணி உள்ளிட்ட பணிகளுக்கு தடையாக உள்ள நில எடுப்பு உள்ளிட்டவற்றில் உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் கிடப்பில் உள்ள சுரங்க நடை பாதை, உயர் மட்ட நடைபாதை மற்றும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல இந்த பணிகள் முடிவடையும் வரை, ரயில் நிலையத்தில் ஒரு காவலரை பணியில் அமர்த்தி, ரயில்கள் வரும் போது உரிய எச்சரிக்கை அளிக்க ரயில்வே துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்செல்வநம்பி, கணேசன், ரயில்வே துறை கோட்டபொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT