புதுச்சேரி | போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு: நாராயணசாமி வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்
முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் மீனவ சமுதாய மக்களை புறக்கணிக்கிறார்கள். மத்திய பாஜகவும், புதுச்சேரி கூட்டணி கட்சியான பாஜக அரசும் உலக மீனவர் தினத்தையும், மீனவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கார வேலர் சிலைக்கு மாலை அணிவிப்பதையும் அரசு விழாவாக கொண்டாடுவதில்லை. மீனவ சமுதாய மக்களுக்கு மத்திய அரசில் இருந்து நிறைய திட்டங்களை கொடுக்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேர்தல் வரும் சமயத்தில் மீனவர்கள் மத்தியில் பல விழாக்களை நடத்தி மீனவ மக்களை ஏமாற்றிவருகிறார்.

மீனவ சமுதாய மக்களை அதல பாதாளத்தில் தள்ளியிருக்கிறது. புதுச்சேரியில் வன்னியர், பட்டியலினத்தவர்களுக்கு அடுத்தபடியாக மீனவ மக்கள் பரவலாக இருக்கின்றனர். ஆகவே மீனவ சமுதாய மக்கள் தங்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஆட்சியில் முன்வைத்தார்கள். அதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்தபோது அப்போதைய ஆளுநர் கிரண் பேடி அதை ஏற்கவில்லை. தற்போது மீனவ மக்கள் அந்த கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ அமைப்புகள், பல அரசியல் கட்சியில் உள்ள மீனவ சமுதாய தலைவர்கள், தொண்டர்கள் புதுச்சேரியில் மீனவ மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்ககாலதாமதம் ஆகும் என்ற காரணத்தை கூறி, அவர்களை மறுபடியும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து, சாதிவாரியாக வேலை வாய்ப்பு, கல்வியில் சலுகை வழங்க முடிவெடுத்து நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜக சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக எதிர்கின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்திலும் சலுகை வழங்குவது என்ற நிலை இந்தியா முழுவதும் வந்திருக்கிறது.

முதல்வர் ரங்கசாமியால் பல மாதங்களோ, பல நாட்களோ இதை தள்ளிப்போட முடியாது. இதற்கான கோப்பு ஏற்கெனவே பரிசீலனையில் இருக்கிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆகவே முதல்வர் ரங்கசாமி போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் சாதி விகிதாச்சார அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in