Published : 19 Jan 2018 07:42 AM
Last Updated : 19 Jan 2018 07:42 AM

எல்லையில் தமிழக வீரர் வீர மரணம்: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் வீர மரணம் அடைந்தார். இதனால் அவரது சொந்த ஊரான தருமபுரி மாவட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியபோது, எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஏ.சுரேஷ் வீர மரணமடைந்தார். இவர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜானகி (32). இவர்களுக்கு புன்னகை(13) என்கிற மகளும், ஆதர்ஷ் (7) என்கிற மகனும் உள்ளனர். தாயார் சாலம்மாள் (60), தந்தை அய்யாசாமி (70). அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் (45) உள்ளிட்டோர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

எல்லை பாதுகாப்புப் படையில் 78-வது பட்டாலியனில் சுரேஷ் பணிபுரிந்து வந்தார். அவர் வீர மரணம் அடைந்த சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் சுரேஷின் வீட்டில் குழுமியுள்ளனர். நாட்டுக்காக சுரேஷ் தனது உயிரை தியாகம் செய்துள்ளதை எண்ணி அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டனர்.

சுரேஷின் அண்ணன் சுபாஷ் சந்திரபோஸ் கூறும்போது, ‘எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் சுரேஷ் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக நேற்று முன்தினம் (17-ம் தேதி) இரவு 12.30 மணிக்கு தகவல் வந்தது. சுரேஷின் உடலை, அங்கு ராணுவ மரியாதை செய்த பிறகு, உடன் பணிபுரியும் வீரர்கள், விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வருகின்றனர். கோவையில் இருந்து தருமபுரிக்கு வாகனம் மூலம் உடல் நள்ளிரவு (18-ம் தேதி) கொண்டு வரப்படுகிறது.

இங்கு எனது தம்பியின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யும் பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சரவணன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். நாட்டுக்காக எனது தம்பி உயிரை விட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது.

எனது தம்பி தமிழக காவல்துறையில் சேர ஆர்வத்துடன் இருந்தார். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து 1995-ல் பாதுகாப்பு படையில் சேர்ந்தார். ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்தும், நாட்டின் மீது அதிகப்பற்று கொண்டதால் மேலும் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு கட்டாயம் வீட்டுக்கு வருவார். இந்த ஆண்டு விடுமுறை கிடைக்கவில்லை என்பதால் பொங்கல் முடிந்து பிறகு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது குண்டு பாய்ந்து உயிரிழந்த தகவல் வந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது தம்பியின் மனைவி ஜானகி, முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அவரது படிப்புக்கு ஏற்ற பணியை தமிழக அரசு வழங்கிட வேண்டும். குழந்தைகளின் கல்விக்கும் உதவ வேண்டும்’ என்றார்.

ரூ.20 லட்சம் நிதி

சுரேஷின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சுரேஷ் வழிகாட்டுதலால் அவரது கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் ராணுவம், மத்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x