

நாகர்கோவில்: மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள் என, கனிமொழி எம்.பி. பேசினார்.
மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு, கோடிமுனை பங்கு பேரவை, பங்கு மக்கள் சார்பில் உலக மீனவர் தின கோரிக்கை மாநாடு குளச்சல் அருகே கோடிமுனையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: "மீனவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்ட மாகவே உள்ளது. மீனவர்கள் பாதிக்கப்படும் பிரச்சினையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. ஜாதி, மதத்தின் பெயரால் பிரச்சினைகளை உருவாக்கி பிரிவினை ஏற்படுத்துவதில் மத்திய ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். மீனவர்களுக்கு நலவாரியம், தனித் துறை அமைக்கப் பட்டது கருணாநிதி ஆட்சியில் தான். நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், கோடி முனை பங்குத் தந்தை சீலன், விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ் குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கலந்து கொண்டனர்.
மகளிரணி கூட்டம்: தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா, திமுக மகளிரணி பயிற்சி பாசறை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசினார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மகளிரணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, “ பெண்களைப் பற்றி யார் தவறாக பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.