

மதுரை: நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டா கேட்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பவுன்ராஜ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். தற்போது அரசு அதிகாரிகள் நாங்கள் குடியிருந்து வரும் பகுதி நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுப்பணித் துறையினரும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு தடை விதித்து எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா கேட்பதை ஏற்க முடியாது'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ''நீர் நிலையை ஆக்கிரமித்து பட்டா கேட்பதை ஏற்க முடியாது. நீர் நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதனால் பட்டா கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு ஆவணப்படி புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர் நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.