விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தகவல்

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தகவல்
Updated on
1 min read

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அக்கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தனது உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜயகாந்துக்கு சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது பெயரில் தேமுதிக தலைமையகம் வாயிலாக அறிக்கைகள் மட்டும் வெளியாகி வருகின்றன.

மாதம் ஓரிரு முறை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர் மழை மற்றும் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால், விஜயகாந்த் தொடர் இருமல், காய்ச்சல், சளி, தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18-ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக பரவும் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் தகவல்

இதற்கிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு வருகிறேன். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அதற்குரிய மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாலும் நலமுடன் உள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in