Published : 17 Jan 2018 09:10 AM
Last Updated : 17 Jan 2018 09:10 AM

பாரம்பரியத்தை மறவாமல் மேற்கு வங்கத்தில் பொங்கலை கொண்டாடிய தமிழர்கள்

வெளி மாநிலங்களில் வசிப்போர் பண்டிகைகளை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவது இயலாத அல்லது தெரியாத ஒன்றாக மாறி வருகிறது.

இவர்களுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றி வரும் தமிழக ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள், பாபா அணு ஆராய்ச்சி மையம், சாஹா அணு இயற்பியல் நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் குடும்பத்தினர், அப்பகுதி தமிழர்கள் என சுமார் 100 பேர் ஒன்றிணைந்து சால்ட் லேக் பகுதியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அதுவும் பாரம்பரிய உடை அணிந்து, மாவிலை தோரணம் கட்டி, மண் பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு பாரம்பரிய முறையில் கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி செ.சுதாகர் கூறும்போது, “வெளிமாநிலங்களில் காவல்துறை போன்ற முக்கிய பணிகளில் இருப்போருக்கு பண்டிகை நாட்களில் விடுப்பு கிடைப்பது கடினம். அதோடு பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்றே வெளிமாநிலங்களில் வசிக்கும் பலருக்கு தெரிவதில்லை. இதனால், நமது பாரம்பரியம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் தடைபட்டுவிடுகிறது.

எனவேதான், தமிழர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையை கொண்டாட முடிவு செய்தோம். மேற்கு வங்கத்தில் மல்லிப்பூ, சாமந்திப்பூ, செங்கரும்பு போன்றவை கிடைக்காது என்பதால், அவற்றை ஊரிலிருந்து எடுத்து வரச் சொல்லிவிட்டோம். மேலும், திருச்சியிலிருந்து சமையல் கலைஞர்களை வரச்சொல்லி பாரம்பரிய உணவுகளை சமைத்து பரிமாறினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x