

சென்னை: ஊராட்சிகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என ஊராட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தன்னாட்சி அமைப்பின் தலைவர் எம்.ஜாகிர் ஹூசைன், நிர்வாகி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்ராஜேஷ், வேதநாயகி, மு.முகமதுஜியாவுதின், ரம்யா, சிவராசுஆகியோர் கூட்டாக சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் மூலமாகவே கிராமங்களில் சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு, வீட்டு வசதி போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிராம ஊராட்சியின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்(1994) 104 மற்றும் 106 பிரிவுகளில் திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
அதன் அடிப்படையில் கிராம ஊராட்சி செயலாளரின் மீது ஒழுங்குநடவடிக்கை எடுத்தல், அவரது பணியிட மாற்றம் ஆகியவை தொடர்பாக கிராம ஊராட்சியிடம் இருந்தஅதிகாரம் பறிக்கப்பட்டு, வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு சட்ட திருத்தங்களை கொண்டு வந்ததுடன், செப்டம்பர் மாதம் ஊராட்சி செயலாளர்களுக்கான புதிய பணி விதிகளையும் அரசு அறிவித்திருக்கிறது.
ஊராட்சி செயலாளர்கள், கிராமஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதே மக்களின் பணிகளை நடைமுறைபடுத்துவதற்கு சரியானதாக இருக்கும். தற்போது தனித்து விடப்பட்டதால் குறுநில மன்னர்களைபோல செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மேலும் புதிய பணி விதிகள் அதிகஊழலுக்கு வழிவகுக்கும். எனவே ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்ய வேண்டும்.
இந்த சட்டத் திருத்தங்களை உடனடியாக அரசு திரும்பபெற வேண்டும். இதையொட்டி முதற்கட்டமாக திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஊராட்சிகளின் உரிமை மீட்பு பயணத்தை விரைவில் மேற்கொள்ள உள்ளோம்.அதைத்தொடர்ந்து சட்டப் போராட்டதையும் முன்னெடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.