Published : 21 Nov 2023 06:20 AM
Last Updated : 21 Nov 2023 06:20 AM
சென்னை: பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்து விபத்தில் சிக்குவதைத் தடுக்க, மாணவர்களுக்காக பிரத்யேக பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசுப் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியபடியே பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆபத்தை உணராமல் விளையாட்டுத்தனமாக மாணவர்கள் இதுபோல் பயணம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், குறைவான எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்குவது, நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் செல்வது போன்றவற்றால், கிடைக்கும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, போரூரில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் படிக்கட்டிலும், மேற்கூரையைப் பிடித்து தொங்கியபடியும் பள்ளி மாணவர்கள் பயணித்தனர். பேருந்தின் பின்னால் காரில் வந்து கொண்டிருந்த பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், ஆபத்தை உணராமல் மாணவர்கள் பயணிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே சென்று பேருந்துக்கு முன்பாக காரை நிறுத்தி, பேருந்து ஓட்டுநரை கடுமையாகக் கண்டித்தார். பின்னர், பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறங்கிச் செல்லுமாறு எச்சரித்த அவர், சில மாணவர்களை அடித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அரசுப் பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சனா நாச்சியாரைக் கைதுசெய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் இந்நிலையில், கடந்த 17-ம்தேதி அதே குன்றத்தூர் பகுதியில் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ், சக மாணவர்களுடன் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தபோது, தவறி கீழே விழுந்ததில், பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனின் இருகால்களும் முட்டிக்கு கீழ் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஜாமீனில் வெளிவந்துள்ள ரஞ்சனா நாச்சியார், மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “குன்றத்தூர் பகுதியில் அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை நான் தட்டிக் கேட்டது ஒரு பிரச்சினையானது. நான் சொன்ன விதம் தவறாக இருந்தாலும், எனது நோக்கம் சரியானது. அதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியல் சாயம் பூசினர்.
தற்போது அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளன. சாதாரண வேலை செய்யும் ஏழ்மையான குடும்பம். மகனின் கால்கள் அகற்றப்பட்டது என்பது பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் வேதனை ஆகும். பள்ளி மாணவர்களுக்காக மூடிய கதவுகளுடன் கூடிய இலவச பேருந்துகளை இயக்க வேண்டும். கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் விஷயத்தில் அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது. இதேபோல் மற்றொரு மாணவனுக்கு விபத்து நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்றார்.
சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் கூறும்போது, “ஒவ்வொரு வழித்தடத்திலும் எவ்வளவு பள்ளி மாணவர்கள் பேருந்தைப் பயன்படுத்துகின்றனர் என்ற விவரத்தை பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து பெற்று காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேக பேருந்துகளை இயக்க வேண்டும். பள்ளிகளில் தினமும் அரைமணி நேரம் ஒழுக்கம் சார்ந்த கல்வியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறையுடன் பேசி ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT