Published : 21 Nov 2023 06:13 AM
Last Updated : 21 Nov 2023 06:13 AM
சென்னை: நிலமில்லாத ஆதிதிராவிட மக்களுக்கு பஞ்சமி நிலங்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள்சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின், தலைமை நிலையச் செயலாளர்கள் பாலசிங்கம், தகடூர் தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர் பெ.தமிழினியன், மகளிரணிச் செயலாளர் இரா.நற்சோனை, செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் மூத்ததலைவர் என்.சங்கரய்யா, விசிக முதன்மைச் செயலாளர் உஞ்சை அரசன் ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில், நிலம் இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு பஞ்சமி நிலங்களைப் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2023 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதுபோல, பட்டியல் சமூகத்தினர் துணைத் திட்டம் (எஸ்சிஎஸ்பி), பழங்குடியினர் துணைத் திட்டத்துக்கான சட்டம், எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆகியவற்றை அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.மக்கள் தொகை அடிப்படையில் எஸ்சி., எஸ்டி., பிசி., எம்பிசி பிரிவினரின் இடஒதுக்கீடு அளவைஉயர்த்த வேண்டும்.
அரசுத் துறைகளில் எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின்படி காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும். அண்ணாமலைப் பல்கலை.யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டியலின மக்கள் மீது தாக்குதல்நடத்துவோர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவும், சிப்காட் விவகாரத்தில் ஒருவர் மீது நிலுவையில் உள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்வதுடன், அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்யவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT